விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மும்பை மாநகராட்சி கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இடித்தது.
இடிக்கப்பட்ட தனது அலுவலகத்தை பார்க்க, கங்கனா ரணாவத் சண்டிகரில் இருந்து மும்பைக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் பயணித்த செய்தியாளர்கள் சிலர், கங்கனாவை புகைப்படம் எடுத்தனர், மேலும் அவர்கள் கரோனா விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "விமானங்களில் கரோனா வழிகாட்டுதல்கள் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், விமான நிறுவனங்களுக்கு இரண்டு வாரங்கள் வரை தடை விதிக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், கங்கனா விவகாரத்தில் விதிமுறைகளை மீறிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இண்டிகோ நிறுவனத்திடம் வலியுறுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றையும் இண்டிகோ அமைத்திருந்தது.
அந்தக் குழு சமர்பித்த அறிக்கையில், விமானத்தில் பயணித்த ஒன்பது செய்தியாளர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த ஒன்பது செய்தியாளர்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு இண்டிகோ விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'உங்க அப்பாகிட்ட கேளு' - தேஜஸ்வி யாதவை வெளுத்து வாங்கும் நிதிஷ்குமார்