கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தன்மையை குறைக்க இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டநிலையில், மற்ற சில மாநிலங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை உலகச் சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநர் ரோட்ரிகோ ஓப்ரின் நேற்று வெளியிட்ட செய்தியறிக்கையில்:
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தனிமைப்படுத்தும் நடவடிக்கை, சமூக விலக்கம் (Social Distancing), ரயில் சேவை நிறுத்தம், மாநிலங்களுக்கிடையே பேருந்து சேவை நிறுத்தம் ஆகியவை மிகவும் தீர்க்கமான ஒன்று. இதன்மூலம் வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகச் சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஜெ. ராயன், "பெரிய அம்மை, போலியோ உள்ளிட்ட மோசமான நோய்களை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவந்து வீழ்த்துவது என்பதை இந்தியா உலகிற்கு முன்நின்று செய்து காட்டியுள்ளது. எனவே, இந்தியாவின் இந்தத் தீர்க்கமான கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வான்வழியாக கரோனா பரவுவதாக எங்கேயும் பதிவாகவில்லை!