லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுடன் ராணுவம், தூதரக ரீதியாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக உள்ளது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனை அவர், மகாராஷ்டிர பாஜக சார்பாக நடைபெற்ற 'ஜன் சம்வாத்' இணையவழி மாநாட்டில் உரையாற்றியபோது கூறினார்.
மேலும் அந்த மாநாட்டில் அவர், "இந்தியா-சீனா இடையே எல்லைத் தகராறு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதற்குக் கூடிய விரைவில் தீர்வுகாண நாம் விரும்புகிறோம். சீனாவுடன் ராணுவம், தூதரக ரீதியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றது.
கடந்த ஜூன் ஆறாம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. தற்போதைய மோதல்போக்கு விவகாரத்தில் சுமுகத்தீர்வு காண்பதற்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
நமது நாட்டின் தலைமை மிகவும் வலுவான கைகளில் உள்ளது. நாட்டின் பெருமை, சுயமரியாதையில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது.
நாட்டு மக்களை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன், அவர்களைப் பாதுகாப்பதே எங்களின் கடமை" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தடுப்பு மருந்தை உருவாக்குவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுவூட்ட சீனா முயற்சி'