கோவிட் - 19 காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இந்தோ-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கு கூட்டம் இன்று (ஜூலை 24) நடைபெற்றது.
இதில், பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினர்.
அவர் பேசியதாவது, 'நாட்டின் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடும் சரிவைச் சந்திதுள்ளது. கோவிட் - 19 இன் தாக்கம் இந்த வீழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் 9 விழுக்காடு வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு தற்போது பின்பற்றிவரும் பொருளாதார கொள்கையை தொடர்ந்தால் இது மேலும் மோசமடையும். அதேவேளை பொருளாதர கொள்கையில் உரிய மாற்றம் செய்யும்பட்சத்தில் 2021-22 நிதியாண்டில் ஏழு விழுக்காடு வளர்ச்சியை இந்தியா அடையலாம். இதற்கான திறன் இந்தியாவிற்கு உள்ளது.
பொருளாதார நிலை தொடர்பாக 2015ஆம் ஆண்டு தொடங்கி பிரதமர் மோடிக்கு நான் தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறேன். அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சிறப்பு நிதியில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் அதிகளவிலான மனிதவளம் உள்ள நிலையில், ஜப்பானைப் போல நாமும் வளர்ச்சியை அடையலாம். வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிப்பது, உள்ளூர் வியாபாரிகளை பாதிக்கும்' என்றார்.
இதையும் படிங்க: உலகளவில் டாப் 50க்குள் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவனம்!