இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவைலக் கட்டுப்படுத்த அதிகளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "நாட்டில் கரோனா பரிசோதனை திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுவருகிறது. தற்போது நாடு முழுவதும் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் மாதிரிகளை சோதிக்க முடியும். இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளில் நாட்டின் மொத்த திறன் என்பது இன்னும் பயன்படுத்தப்படவில்லை" என்றார்.
இதுவரை சுமார் 59 லட்ச மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1.54 லட்ச மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்களிலும் மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனைகளுக்கு அதிகபட்ச கட்டணத்தையும், கரோனா மருத்துவ சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணத்தையும் தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நிர்ணயம் செய்துள்ளன.
மேலும், "கரோனா நோயாளிகளுக்கு தகுந்த மற்றும் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பணிபுரிவது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்" என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகரில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், டெல்லியிலுள்ள 11 மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்ட மக்களின் மாதிரிகளை பிரத்தியேகமாக பரிசோதிக்க ஆய்வகங்களை ஒதுக்கியுள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது. டெல்லியில் மட்டும் தற்போது 42 ஆய்வகங்கள் இருப்பதாகவும், இதன் மூலம் தினசரி 17ஆயிரம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக கரோனா பாதிப்புகளை கொண்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சோதிக்க விரைவான ஆன்டிஜென் சோதனைகளை (rapid antigen tests) மேற்கொள்ளவும் சுகாதாத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் தற்போதுவரை 3,43,091 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1,53,178 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்; 1,80,012 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக 380 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,900ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 'இறந்த உடலில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்' - மேற்கு வங்க அரசு உத்தரவு!