எளிய மக்களை கவர்வது என்பது சுலபமான செயல் அல்ல. சினிமா துறையில் இருந்தாலும் கூட அதற்கு சில தடைகள் உண்டு. அதனை எல்லாம் உடைத்தெறிந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் என சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில், 2014ஆம் ஆண்டு நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், ரஜினிகாந்த் இவரது காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இந்த ஒரு சம்பவம் இவரின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்கும். 1969ஆம் ஆண்டு வெளியான சாத் இந்துஸ்தானி என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் தொடக்க காலத்தில், சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர், பார்வானா படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
![Amitabh Bachchan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4543349_ami.jpg)
ஆனந்த் என்ற படத்தில் மருத்துவர் வேடத்தில் கச்சிதமாக பொருந்திய இவர், பாம்பே டு கோவா படத்தில் ஹீரோவாக கலக்கி இருப்பார். இந்திய சினமாவில் இவர் அளவுக்கு ஸ்கிரீன் பிரசன்ஸ் யாருக்கும் இல்லை என்றுகூட சொல்வதுண்டு. திரையில் கோபமுள்ள இளைஞராக தோன்றி உரத்த குரலில் இவர் பேசும் வசனங்களால் திரையரங்குகள் அதிர்ந்தன. சான்ஜீர், தீவார், திருஸுல், சோலே போன்ற படங்கள் இந்திய ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.
![Amitabh Bachchan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4543349_amita.jpg)
கோபமாக மட்டும்தான் இவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தபோது, அமர் அக்பர் அந்தோனி என்ற படத்தில் திரையரங்கையே சிரிப்பலையில் மூழ்கவைத்திருப்பார். இப்படி மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வந்த இவர், கபி கபி என்ற காதல் படம் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக உருவெடுத்தார். அந்த காலகட்டத்தில் இந்தி சினிமாவின் முதல் பத்து இடங்களுமே இவருக்கு மட்டும்தான் சொந்தம். எந்த அளவுக்கு எளிய மக்களை கவர்கிறோமா அந்த அளவுக்கு சினிமாவில் நிலைத்து இருக்கலாம், இதனை மிகச் சரியாக அமிதாப் கையாண்டார். மக்களுக்கு ஆதரவான எளிய கதாபாத்திரங்களில் தோன்றி சக்திவாய்ந்தவர்களுக்கு எதிராக போராடும் துடிப்பு மிக்க இளைஞராக பல படங்களில் நடித்து ஐம்பது ஆண்டு காலம் இந்தி சினிமாவை தன்னை சுற்றி சூழலவைத்துள்ளார். நடிப்பு, பாடல், நடனம் என அனைத்திலும் கலக்கும் இவரை 70களின் தாத்தகளிலிருந்து, இப்போதுள்ள சிறுவர்கள் வரை அனைவரும் ரசிக்கின்றனர்.
![Bhoothnath](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4543349_maita.jpg)
ஆனால், 90களில் இவரின் பல படங்கள் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து, உச்ச நட்சத்திரங்களுக்கான அனைத்து வரம்புகளை உடைத்தெறிந்து நடிகர்கள் யாரும் நடிக்க விரும்பாத வயதான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 2000ஆம் ஆண்டு வெளியான மொஹபத்தின் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஷாருக்கானை மிரட்டியிருப்பார். 2005ஆம் ஆண்டு வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் பிளாக் திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு கற்பிக்கும் வயதான ஆசிரியராக தோன்றி அனைவரின் மனதையும் கொள்ளையடிதிருப்பார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
![Paa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4543349_am.jpg)
மற்ற தரப்பினரை கவர்வதை விட கடினமான ஒன்று குழந்தைகளை கவர்வது, அதற்கு தனித்திறமை வேண்டும். தன் குறும்புமிக்க நடிப்பால் பூத்நாத் படத்தில் பேயாக தோன்றி குழந்தைகளை கட்டி இழுத்தவர் அமிதாப் பச்சான். அவர் வாழ்நாளின் சிறந்த படங்களில் ஒன்று 'பா'. மாற்றுத்திறனாளி மாணவனாக தோன்றி படத்தின் கடைசி காட்சி வரை அப்படியே அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். இறுதி காட்சியில் அவர் இறக்கும்போது திரையரங்கமே சோகத்தில் மூழ்கி கண்ணீர் கடலில் மிதந்தது. அந்தளவுக்கு அந்த காட்சியில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திருப்பார்.
![Amitabh Bachchan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4543349_amit.jpg)
வெள்ளித்துரையில் கலக்கிய அமிதாப் பச்சன் சிறிது காலம் சின்னத்திரையில் 'கோன் பனேகா குரோர்பதி' என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் அனைவரின் வீட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்படிப்பட்ட இந்திய சினிமாவின் ஜாம்பவானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.