இந்தியக் கலாசாரத்தில் 'வணக்கம்' புதிதல்ல, ஆனால் உலகத் தலைவர்களின் கலாசாரம் 'வணக்கமாக' மாறிவருவது புதிது. உலகை உலுக்கும் கொரோனா, வணக்கத்திற்கு விளம்பரம் செய்கிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மொத்தமுள்ள 195 உலக நாடுகளில் 132 நாடுகளுக்குப் பரவியுள்ளது. அதனைக் குணப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், பரவாமல் தடுக்க மருத்துவர்கள் சில ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதில், ”கொரோனோ ஒருவரின் தொடுதல் மூலம் சுலபமாகப் பரவும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமல், தும்மல் ஆகியவை நேரும் போது வாயையும் மூக்கையும் மூட வேண்டும். இந்த அறிகுறிகள் இருப்பவர்களிடம் தள்ளியிருக்க வேண்டும். குறிப்பாக கைகுலுக்குதல் கூடாது” என்கின்றனர்.
![இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6410632_van.jpg)
மருத்துவர்களின் ஆலோசனைகளில் கை குலுக்குதலைத் தவிர்ப்பது என்பது, இந்தியாவைத் தவிர்த்து மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடினம்தான். ஏனென்றால் அவர்களின் வரவேற்பு கலாசாரமே கை குலுக்கல்தான், அதை எப்படி அவர்கள் தவிர்ப்பார்கள் எனும் கேள்வி எழுந்தது.
அதற்கு 'நமஸ்தே ட்ரம்ப்' வாயிலாக ஐடியா கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பயணத்தின்போது, நம் கலாசாரம் ஒன்றை கையிலே எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்றார். அது வேறொன்றுமில்லை வணக்கம் சொல்லி வரவேற்பது. அண்மையில் அதிபர் ட்ரம்ப் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கரை சந்திக்கும்போது அவருடன் கை குலுக்காமல் வணக்கம் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியா சென்று வந்ததிலிருந்து கை குலுக்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். நமக்கு பழக்கப்பட்ட வணக்கமானது, கொரோனாவால் ஆரோக்கியமான பழக்கமாக மாறிவருகிறது.
![பிரான்ஸ் அதிபர் மேக்ரான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6410632_vanak.jpg)
2018ஆம் ஆண்டு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வந்தபோது, வணக்கம் கலாசாரத்தை கற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அண்மையில் நடந்த விருது விழா ஒன்றில் கைகுலுக்குவதைத் தவிர்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
![அமெரிக்க அதிபர் ட்ரம்ப்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6410632_vanakkam.jpg)
அதுமட்டுமில்லாமல், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க இஸ்ரேலியர்கள் கைகுலுக்கலைத் தவிர்த்து இந்தியர்களைப் போல வணக்கம் சொல்ல வேண்டும் என ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தார். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்திய நிலையிலும் வணக்கம் கலாசாரம் உலக தலைவர்களிடையே பிரபலமாகிவருவது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது.
![இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6410632_va.jpg)
இதையும் படிங்க: வணக்கம் வைத்த பிரிட்டன் இளவரசர்: இந்திய இணையவாசிகள் பெருமை