கடந்த ஒரு மாதமாக இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா தனது ராணுவத்தை குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் எல்லையில் போர் பதற்றம் உருவானது. அதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் இருக்கும் படைகளை திரும்ப பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரு தரப்பு ராணுவ உயர் அலுவலர்களும் கடந்த இரண்டு நாள்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு தரப்பும் சம்மதித்தன.
அதன்படி இன்று மூன்றாவது நாளாக இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவைக் கோபப்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, ஆனால் பயன்படுத்தவில்லை - வெளியுறவுத் துறை அமைச்சர்