கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு சார்பாக வந்தே பாரத் மிஷன் எனப் பெயரிட்டு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் மீட்டு வரப்படுகின்றனர்.
மே 7ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை முதல் கட்ட மிஷனில் 12 நாடுகளிலிருந்து 15 ஆயிரம் பேர் தாயகம் திரும்பினர். இதையடுத்து மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மிஷன் செயல்படுத்தப்பட்டது. இந்த இரண்டு மிஷனிலும் சேர்த்து 45 ஆயிரத்து 216 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் வந்தே பாரத் மிஷனை ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ''வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 45 ஆயிரத்து 216 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த மிஷனில் 429 ஏர் இந்தியா விமானங்கள் 60 நாடுகளுக்கு செல்லவுள்ளன. இலங்கை, ஈரான், மாலத்தீவு பகுதிகளில் உள்ளவர்களை அழைத்துவர கப்பல்படை கப்பல்களைப் பயன்படுத்தவுள்ளோம்.
இரண்டாம் கட்ட வந்தே பாரத் மிஷனில் 1 லட்சம் பேரை இந்தியாவுக்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 3 லட்சத்து 8 ஆயிரத்து 200 பேர் இந்தியாவுக்கு வருவதற்காக மத்திய அரசின் தளத்தில் பதிவு செய்துள்ளனர். மூன்றாம் கட்ட மிஷன் குறித்த திட்டங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு: ஆணையத்திற்கு 15 மக்களவை உறுப்பினர்கள் நியமனம்