ஐநாவின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருப்பது ஐநா பாதுகாப்பு கவுன்சில். உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டுவதில் மிக முக்கியp பங்குவகிக்கும் இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை நிராகரிக்கும் அளவுக்கு இந்த நாடுகளுக்குப் பிரத்யேகமான அதிகாரம் உண்டு.
இதையடுத்து, ஜெர்மனி, பெல்ஜியம், போலாந்து உள்ளிட்ட 10 தற்காலிக உறுப்பு நாடுகள் உள்ளன. இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டுகளுக்கான தற்காலிக உறுப்பு நாடுகளுக்கானத் தேர்தலில் இந்தியா போட்டியிடவுள்ளது. இதற்கு, பாகிஸ்தான், சீனா உட்பட 55 ஆசிய பசிபிக் நாடுகள் ஆதரவு தந்துள்ளன. ஏற்கனவே, 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992, 2011-2012 ஆகிய காலகட்டங்களில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இருந்துள்ளது.
தற்காலிக உறுப்பு நாடுகள் தேர்தலுக்கான பரப்புரையின் முக்கிய அம்சங்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார். இதற்கான தேர்தல் ஜூன் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.