இது தொடர்பாக என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் இணைந்து 2019 ஆம் ஆண்டில் நாட்டில் நடந்த மொத்த 1,39,123 தற்கொலைகள் நடந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த கணக்கில் இது 49.5 % விழுக்காடாக உள்ளது.அதேபோல, 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்கொலைகள் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்த தற்கொலைகளில், மகாராஷ்டிராவில் 18 ஆயிரத்து 916 பேரும் (13.6 %) அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 493 பேரும் (9.7%), மேற்கு வங்கத்தில் 12 ஆயிரத்து 665 பேரும் (9.1 %), மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்து 457 பேரும் (9%), கர்நாடகாவில் 11 ஆயிரத்து 288 பேரும் (8.1%) தற்கொலை செய்துள்ளனர்.
இந்த ஐந்து மாநிலங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 50.5 சதவீத தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
உத்தரபிரதேசம், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் (நாட்டு மக்கள் தொகையில் 16.9 சதவீதம்) தற்கொலை இறப்புகளில் 3.9 சதவீதம் மட்டுமே கொண்டு ஒப்பீட்டளவில் குறைந்த சதவீத பங்கைப் பதிவு செய்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசமாக விளங்கும் டெல்லியில் 2 ஆயிரத்து 526 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் 493 பேர் உயிரிழந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் நாட்டின் 53 பெருநகரங்களில் மொத்தம் 22ஆயிரத்து 390 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
பெரும்பாலான தற்கொலைக்கான காரணமாக ‘குடும்ப பிரச்னைகள்’(32.4%) மற்றும் ‘நோய்’ (17.1%) ஆகியவையே இருப்பதாக என்.சி.ஆர்.பி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளன.
போதைப்பொருள் பயன்பாடு 5.6%, திருமணம் தொடர்பான பிரச்னைகள் 5.5%, சதவீதம், காதல் விவகாரங்கள் 4.5% கடன் தொல்லை 4.2 %, தேர்வுகளில் ஏற்பட்ட தோல்வி மற்றும் வேலையின்மை 2.0 %, தொழில் சிக்கல் 1.2 %, சொத்து தகராறு 1.1 % முறையே இத்தனை விகிதம் பங்கு வகிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்ட மொத்த பாதிக்கப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 359 பேர் (15.4 %) பெண் பாலினமாவர். மொத்த பாதிக்கப்பட்ட பெண்களில் 51.5 % அதாவது 21 ஆயிரத்து 359 பேர் இல்லத்தரசிகள் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்தோர் 6.3 % (8,730) அரசு ஊழியர்கள் 1.2 % (1,684) ஆக உள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் 66.7% அதாவது 92 ஆயிரத்து 757 பேர் திருமணமானவர்கள். 23.6 % அதாவது 32 ஆயிரத்து 852 பேர் திருமணமாகாதவர்கள். விதவைகள் 1.8% (2 ஆயிரத்து 472 பேர்), விவாகரத்து பெற்றவர்கள் 0.7 % (997 பேர்), இணையை பிரிந்தவர்கள் 0.7% (963 பேர்)
முரண்பாடாக, 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 72 குடும்ப தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தற்கொலைகளில், திருமணமான 126 பேர் மற்றும் திருமணமாகாத 54 நபர்கள் அடங்கிய மொத்தம் 180 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக குடும்ப தற்கொலைகள் (16 வழக்குகள்) பதிவாகி உள்ளன. ஆந்திரா (14 வழக்குகள்), கேரளா (11), பஞ்சாப் (9 வழக்குகள்) மற்றும் ராஜஸ்தான் (7 வழக்குகள்) ஆகியவை 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 43 நபர்களுடன் பதிவாகியுள்ளன.
இந்திய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் மருத்துவ மற்றும் சுகாதார உளவியலாளர் சோமியா சிங் பேசியபோது, "தற்கொலை போக்குகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய செய்தி. பதின்வயது முதல் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வரை தற்கொலை என்பது சர்வ சாதாரண ஒன்றாக மாறிவருகிற ஆபத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. மனச்சோர்வு மற்றும் தனிமை ஆகியவை தற்கொலை சம்பவங்களின் இரண்டு முக்கிய காரணிகளாகும்.
இந்த வகையான சம்பவங்களைத் தடுக்க குடும்பமும், மனதுக்கு நெருக்கமானவர்களும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
இப்போதெல்லாம் தற்கொலை போக்கு அதிகரித்து வருகிறது என்ற உண்மையை ஒப்புக் கொள்கிற அதே நேரத்தில் அதை சரி செய்ய முடியும் என்றே நம்புகிறேன்.
பள்ளி குழந்தைகள், வேலை தேடுபவர்கள், உறவு பிரச்னைகளுடன் வாழும் ஒரு நபர் கூட தற்கொலை போக்குகளைக் கொண்டுள்ளனர். அதை நாம் மிக முக்கியமாக அணுக வேண்டும்" என வலியுறுத்தினார்.