டெல்லி: கோவிட்-19 தொற்றுக்கான ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பி.என்.டி 162 நல்ல முறையில் செயலாற்றுகிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அந்நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், தடுப்பூசிக்கான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் வந்த பின்னரே சாத்தியமான ஒப்பந்தங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் எனவும் மத்திய சுகாாரத் துறை செயலர் பேசியுள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை இன்று (நவம்பர் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பெருந்தொற்று கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றினால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், தற்போது கரோனா தொற்று பாதிப்புள்ளவர்களின் விழுக்காடு 5.83ஆக உள்ளது எனக் குறிப்பிடும் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை, கரோனாவிலிருந்து மீண்டவர்களின் விழுக்காடு 92.69ஆகவும் கரோனா இறப்பு விகிதம் 1.48ஆக உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
கடந்த வாரத்தில் உலகின் கரோனா தொற்று சராசரி பத்து லட்சம் பேரில் 482 பேர் என இருந்து வந்த நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் கரோனா பாதிப்பு சராசரியாக பத்து லட்சம் பேருக்கு 235 பேர் என்ற அளவிலே இருந்தது.
இந்தியாவில், 79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக கரோனா சோதனைகள் அதிகம் செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா தொற்று பாதிப்பு விழுக்காடு 7.18 விழுக்காடாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி : மருத்துவ நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்