ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசிவருகிறார். அந்த வகையில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
"பொதுமக்கள் 2020ஆம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று பேசிக்கொள்கின்றனர். இந்தாண்டு அவர்கள் அதிகப்படியான சோதனைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்பதை நமது வரலாறு நமக்கு காட்டுகிறது. சோதனைகளைக் கடந்து நாம் எழுச்சி பெறுவோம்.
இந்தியா எல்லைகளைப் பாதுகாப்பதிலும், இறையாண்மையை பாதுகாப்பதிலும் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. லடாக்கில் நமது எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. எல்லையில் உயிரிழந்த வீரர்களின் அர்ப்பணிப்பும், அவர்களது பெற்றோர்களின் தைரியமும் இந்தியாவிற்கு சக்தியைக் கொடுக்கிறது. வீரமரணமடைந்த வீரர்களின் தியாகத்தை என்றும் இந்தியா நினைவில் வைத்திருக்கும்.
லடாக்கில் நடந்த சம்பவத்தையடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கவேண்டும் என்ற முழக்கம் மக்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது. இது தேசத்தை வலிமையாக்கி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். ஊரடங்கை தளர்த்தும் நிலையில் நாம் இருக்கிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு நாம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ’டெல்லியில் 4 மடங்காக அதிகரித்த கரோனா பரிசோதனைகள்’