ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை வீரரான குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், அதற்குத் தடை விதித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவை இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தில் இந்திய தூதரக அலுவலர்கள் காத்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜாதவுக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடர்ந்த வழக்கில், தண்டனையை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குல்பூஷன் ஜாதவ், தனது மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டதாகவும், அதற்குப் பதிலாக கருணை மனு தாக்கல் செய்ய விரும்புவதாகவும் பாகிஸ்தான் கடந்த சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தது. ஆனால், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய குல்பூஷன் மறுக்கவில்லை என்றும், அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் இந்தியா கூறியிருந்தது.
குல்பூஷன் ஜாதவை எவ்வித நிபந்தனையுமின்றி இந்திய தூதரக அலுவலர்கள் சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திருக்குறள் அற்புத ஊக்குவிப்பு நூலாகும்" - பிரதமர் மோடி புகழாரம்