மின்னணு வர்த்தக நிறுவனங்களால் தங்களின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வணிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இந்திய அரசு புதிய மின்னணு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் அவை பங்கு வைத்துள்ள நிறுவனங்களின் சில பொருட்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில பொருட்களை பிரத்யேகமாக விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு நிறுவனங்கள் வழங்கும் கேஷ் பேக் சலுகைகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் எவ்வித பாகுபாடுகள் மற்றும் முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மின்னணு நிறுவனங்கள் தணிக்கையாளர் அளித்த சட்டப்பூர்வ முந்தைய நிதியாண்டின் அறிக்கையை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் படி, அமேசான் தனது இந்திய தளத்திலிருந்து மட்டும் சிறிய வகையிலான எதிரொலி ஸ்பீக்கர்கள், பேட்டரிகள், துப்புரவு பொருட்கள் உள்ளிட்டவற்றை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
முன்னதாக நேற்று அமேசானின் இந்திய தளத்தில், அமேசான் மறைமுக பங்குகளை வைத்திருக்கும் கிளவுட் டைல்-ன் பல பொருட்கள் இந்திய தளத்தில் நீக்கப்பட்டிருந்தது. மேலும், இந்திய பல்பொருள் அங்காடி துறை நிறுவனமான செயின் ஷாப்பர் நிறுவனத்தின் ஆடைகளும் திரும்பப்பெறப்பட்டிருந்தன. இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 5 சதவிகிதம் அமேசானுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமேசான் தலைமை நிதி அதிகாரி பிரையன் ஒல்சாவ்ஸ்கி கூறியதாவது, "இந்தியாவில் மின்னணு வர்த்தக நிலைமை தற்போது நிலையற்றதன்மையில் உள்ளது. இருந்தாலும் வர்த்தகத்திற்கு இந்தியா ஒரு சிறந்த நாடாகும். வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் புதிய மின்னணு வர்த்தக விதிகளின் தாக்கத்தை குறைப்பதே எங்களின் பிரதான குறிக்கோள்", என்றார். இந்திய மின்னணு வர்த்தகத்தில் கடந்த ஆண்டு அமேசான் 5.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. வால்மார்ட் நிறுவனம் ப்ளிப்கார்ட் மூலம் 16 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.