இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் பதற்றம் நிலவிவருகிறது. அதிலும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின், பதற்றம் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ உயர் அலுவலர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது, இருப்பினும் எல்லையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ராணுவ உயர் அலுவலர்களுக்கு இடையே நேற்று(செப். 22) காலை ஆறாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை இரவு 11 மணிவரை நீடித்தது. இதில் எல்லைப் பகுதிகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புவதை நிறுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கூட்டத்திற்கு பின் இரு தரப்பினரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இரு நாடுகளுக்கிடையே களத்தில் இருக்கும் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்களையும் தவறான கருத்துக்களையும் தவிர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டன. மேலும், எல்லைக்கு கூடுதல் வீரர்களை அனுப்புவதையும் நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
மேலும், ஏழாவது கட்ட ராணுவ பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டர். களத்தில் இருக்கும் பிரச்னைகளை முறையாகத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், எல்லைப் பகுதியில் அமைதி பாதுகாப்பதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, மே மாதத்திற்கு முன் சீன படைகள் எங்கிருந்தனவோ அதே இடங்களுக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் எல்லையில் இருக்கும் பாங்கோங் ஏரியின் தென் கரையில் இந்திய வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அங்கியிருக்கும் படைகளை இந்தியா விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தியதாவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா-சீனா மோதல்: தகராறை சுமுகமாகத் தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு ஒப்புதல்