இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவை பிரதிபலிக்கும் வகையிலும் பல்வேறு துறைகளில் கூட்டுறவை விரிவுபடுத்தும் நோக்கிலும் இருநாடுகளுக்கிடையே எல்லை தாண்டிய ரயில் சேவையை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
எல்லை தாண்டிய ரயில் சேவை
1965ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்த சிலாஹதி - ஹல்திபரி ரயில் இணைப்பை மறுசீரமைப்பது, ஹைட்ரோ கார்பன், விவசாயம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையிலான ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடி, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்ட உச்சி மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இருநாட்டு தலைவர்களை போற்றும் வகையிலான கண்காட்சி
மகாத்மா காந்தி, வங்க தேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் வாழ்க்கையை போற்றும் விதமான இணைய கண்காட்சியையும் இருவரும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு எளி்தாக செல்வதற்கு சிலாஹதி - ஹல்திபரி ரயில் இணைப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1965ஆம் ஆண்டு வரை, கொல்கத்தா - சிலிகுரி இடையேயான அகல ரயில் பாதையின் ஒரு அங்கமாகவே சிலாஹதி - ஹல்திபரி ரயில் இணைப்பு இருந்துவந்தது. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் கொள்கையில் வங்கதேசம் முக்கிய தூண் என உச்ச மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.