உலக பொருளாதார மன்றம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காணொலி மூலமாக அதில் உரையாற்றினார். அதில், இந்தியா-சீனா உறவு குறித்து முக்கிய கருத்துகளை பேசினார்.
அவர் கூறியதாவது, ”இந்தியா-சீனா முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மோசமான சூழலை சந்தித்துள்ளது. இரு நாடுகளும் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, பேச்சுவார்தை மூலம் தீர்வை எட்ட முன்வர வேண்டும். இரு நாடுகளும் வேகமாக வளர்ந்துவரும் நிலையில் ஒரு நாட்டின் வளர்ச்சியை மற்றொரு நாடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும். எல்லைப் பிரச்னை நிலவிவரும் போதிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான தேவைகளும் உள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதியில் மோதல் போக்கு நிலவிவருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பின் இரு நாட்டு ராணுவத் தலைமையும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தாலும் பதற்ற நிலை இன்னும் தணியவில்லை. இந்த சூழலில் ராஜரீக ரீதியாகவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட முயற்சி செய்துவருகின்றன.
இதையும் படிங்க: ஜனநாயக ஆர்வலர் ஜோசுவா வோங் மீண்டும் கைது!