காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சிக்குப் பின்னால் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் உள்ளதாக விமர்சித்துள்ளார்.
ஊழல்களுக்கு எதிரான இயக்கம் (IAC), ஆம் ஆத்மி கட்சி ஆகியவை குறித்து வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் அளித்துள்ள பத்திரிகை பேட்டியை மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி, "நமக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று, ஆம் ஆத்மி கட்சி நிறுவிய உறுப்பினர் ஒருவரால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
IAC இயக்கம், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஜனநாயகத்தை அழித்து UPA அரசை தகர்க்க RSS/BJP-யால் உருவாக்கப்பட்டவை என்பதை பிரசாந்த் பூஷண் அம்பலப்படுத்துகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு முன்னோடியாக இருந்த ஊழல்களுக்கு எதிரான IAC இயக்கத்தில் பிரசாந்த் பூஷணும் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியிலிருந்த பிரசாந்த் பூசண், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டு யோகேந்திர யாதவுடன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
IAC இயக்கம் குறிப்பாக 2011, 2012ஆம் ஆண்டுகளில் ஊழல்களுக்கு எதிரான போராட்டங்களை அதிகமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பதிவுகள் இல்லையெனில் இறப்புகள் இன்லையென்றாகிவிடுமா? - ராகுல்