இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டெல்லியில் ஜூலை மாத இறுதிக்குள் ஐந்து லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகும் எனவும், மருத்துவமனைகளில் கூடுதலாக 80 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் எனவும் அம்மாநில அரசு கணித்துள்ளது.
இதனிடையே, கரோனா சிறப்புக் குழு தலைவர் மருத்துவர் மகேஷ் வர்மா, தென் டெல்லி மாநகராட்சி ஆணையர் ஞானேஷ் பாரதி, மத்திய சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் மருத்துவர் ஆர்.வர்மா ஆகியோர் டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து மூத்த அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனைகளின் தயார் நிலையை தெரிந்துகொள்ள கரோனா சிறப்புக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவமனைகளில் கூடுதலாக குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களை நிறுவுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்" என்றார்.
மேலும், கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிசியன்ஸ், தொழில்நுட்ப நிபுணர்களை நியமிக்குமாறும் சிறப்புக் குழுவினர் பரிந்துரைத்ததாக அந்த அலுவலர் கூறினார்.
சமீபத்தில் மத்திய அரசின் கீழ் டெல்லியில் செயல்பட்டுவரும் டாக்கர் ராம் மோகன் லோதியா மருத்துவமனையில் கூடுதலாகக் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்கள் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 224 பேருக்குப் புதிதாக கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்து 182ஆக உள்ளது. இதுவரை அங்கு ஆயிரத்து 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஒடிசாவில் கரடி தாக்கி இருவர் பலி