லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் புத்காம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) அங்கன்வாடியில் பணியாற்றும் 50 வயது பெண்மணி ஒருவர் கோயிலுக்குச் செல்வதற்காக இரவு நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கோயிலுக்கு அருகில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த அவரது குடும்பத்தினர், கோயில் அர்ச்சகருக்கு இந்த வழக்கில் தொடர்பிருக்கலாம் எனவும் கூறினர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் அர்ச்சகர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசிய பெண்கள் ஆணையத்தின் சந்திரமுகி தேவி, இரவு நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தாலோ, அல்லது வெளியில் செல்லும் போது குழந்தைகள் போன்ற துணையுடன் சென்றாலோ பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். இதனை ஒரு பெண்ணாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் எனக் கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர், காவல்துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அப்பெண் காப்பாற்றப்பட்டிருப்பார். உயிரிழந்த பெண்ணின் உடற்கூறாய்வு முடிவுகளில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும், அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது கால் எலும்புகள் முறிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் இருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட 50 வயது அங்கன்வாடி பணியாளர்