வடஇந்தியாவின் புனித தலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் இருந்துவருகிறது. கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள இந்த நகருக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரும் 2021ஆம் ஆண்டு ஹரித்துவார் நகரில் கும்பமேள விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு 15 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹரித்துவார் - ரூர்க்கி முன்னேற்றம் அமைப்பு, ஹர் கி பவுரி நகரில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அந்த நகரில் உள்ள மரங்களில் சிவன், கணேஷ் உள்ளிட்ட பல்வேறு இந்து கடவுள்களின் ஓவியத்தை வரைந்துள்ளனர். இதன் மூலம் ஹரித்துவார் மக்களுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் அலோக் பாண்டே தெரிவித்தார்.