உலகளவில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்துவரும் நிலையிலும், நாளுக்குநாள் அவர்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. வெளியே செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பெண்களின் அதிகாரம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அவர்களின் பங்களிப்பு முக்கியமாக இருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு அம்மாநிலம் முழுவதும் பேருந்தில் பெண் ஓட்டுநர்களை நியமித்துள்ளது.
காசியாபாத்தில் உள்ள கௌசாம்பியில் பெண் ஓட்டுநர்களுக்கு இன்று (ஆக. 21) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுநர்களுக்கு காசியாபாத்தைச் சுற்றியுள்ள பாதைகள் கற்றுத்தரப்படும்.
இது குறித்து காசியாபாத் போக்குவரத்துப் பணிமனை மேலாளர் அகிலேஷ் சிங் நமது ஈடிவி பாரத்திடம் தெரிவிக்கையில், “முதன்முறையாக இம்மாநிலத்தில் பேருந்தில் பெண் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். நிர்பயா நிதியுதவின் மூலம் வாங்கப்படும் புதிய பேருந்துகளை பெண்கள் இயக்கவுள்ளனர்.
பேருந்தில் பெண்கள் ஓட்டுநர்களாகப் பணியமர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதன்மூலம் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்கு இது ஒரு உத்வேகத்தை அளிப்பதாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலு, இந்தப் புதிய பேருந்துகளில் கண்காணிப்புப் படக்கருவி, அவசரகால பொத்தான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.