நாட்டில் பரவும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 22) நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களும் காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை சுய ஊரடங்கு பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், மாலை 5 மணியளவில் நமக்காகப் போராடும் சுகாதாரத் துறையினருக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக கை தட்டக் கூறியிருந்தார். அதேபோல், நேற்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தங்களது நன்றியை கைகளைத் தட்டி தெரிவித்தனர்
இந்நிலையில், கேரள முதலமைசச்ர் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எல்லா பேரழிவு நேரத்திலேயும் சுகாதார ஊழியர்கள் மக்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர், ஆய்வக வல்லுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், ஆலோசகர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், பலரின் தொடர்ச்சியான முயற்சிகள்தான் மக்களைப் பாதுகாப்பாக இருக்க உதவியுள்ளது. இதுமட்டுமின்றி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரமும் மக்களுக்குச் சேவையாற்றுவதற்குப் பாராட்டு" என்றார்.
மேலும், அவரின் ஃபேஸ்புக் பதிவில், "கரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அனைவரின் ஆதரவைக் கொண்டு மக்கள் மனத்திலிருந்து வைரஸ் அச்சத்தை அகற்றப் போராடுவோம். உங்கள் அனைவருக்கும் ஒரு சல்யூட்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரள மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கின்போது சுற்றித்திரிந்தவர்களைத் தோப்புக்கரணம் போடச்செய்த காவலர்!