ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கோட்னபள்ளி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நீண்ட நாள்களாக ஹில்டாம் கிராமத்திற்கு செல்வதற்காக சாலை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். அங்கிருந்து பல ஊர்களுக்கு சாலை வசதி உள்ளதால், அவசர காலத்திற்கு உபயோகமாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருதினர். இதுதொடர்பாக பல முறை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காமல் இருந்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தின் மூலம் 4 கிமீ தூரத்திற்கு சாலை அமைத்துள்ளனர். இது கிராமத்தின் உள்ளே இருந்து பிரதான சாலையுடன் இணைக்கும் சாலை ஆகும்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக, குறிப்பாக மழைக்காலத்தில், மற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம். எங்களின், நிலைமையை மேம்படுத்த அரசு எதுவும் செய்யவில்லை. நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், மாவட்ட நிர்வாகம் எந்த கவனமும் செலுத்தவில்லை. பின்னர், எங்கள் சொந்த முயற்சியில் ஒரு சாலையை உருவாக்க முடிவு செய்தோம்.
சாலை வசதி இல்லாதபோது, மருத்துவ அவசரநிலைகளைக் கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. கிராமவாசிகள் வழக்கமாக 5 கி.மீ தூரத்திற்கு மலையேறி, ஒரு மலையடிவாரத்தில் ஒரு காட்டைக் கடந்து, அருகிலுள்ள சாலையை அடைந்து போக்குவரத்தை பிடிக்கிறார்கள். இப்போது, 2 கி.மீ தூரத்திற்கான பாதை பணிகள் முடிந்துவிட்டது. மேலும் இரண்டு கிலோமீட்டர் அடுத்த மாதத்தில் முடிக்கப்படும். சாலை அமைக்க எங்களுக்கு உதவுமாறு மாவட்ட அதிகாரிகளிடம் கோரி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.