இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது புதிய ரக ஆயுதங்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றை இந்திய அரசு வாங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அப்பாச்சி ரக ஹெலிக்காப்டர்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக நான்காயிரம் கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள விமான தயாரிப்பு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஹெலிக்காப்டரின் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. வரும் ஜுலை மாதம் முதற்கட்டமாக இந்த ஹெலிக்காப்டரில் சிலவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், இன்று ஒரே ஒரு ஹெலிக்காப்டர் மட்டும் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது.
அரிசோனாவில் உள்ள போயிங் தொழிற்சாலையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.எஸ்.புட்லா, அப்பாச்சி ஹெலிக்காப்டரை அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மேலும், இந்திய விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட விமானிகளுக்கு இந்த ஹெலிக்காப்டரை இயக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த அப்பாச்சி ரக ஹெலிக்காப்டர் மூலம் மலைப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் எதிரிகளின் இலக்குகளை தாக்குவதற்காக நவீன துப்பாக்கிகளும் இடம்பெற்றுள்ளன. இது தவிர போர் சமயங்களில் சண்டைக்களத்தில் உள்ள காட்சிகளைத் தெளிவாக எடுத்து அனுப்பும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.