ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார், பார்மெர், ஜோத்பூர், பிகானேர், ஸ்ரீ கங்கா நகர், ஜெய்ப்பூர், நாகௌர், அஜ்மர் மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பானா மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லலில்பூர் பகுதியிலும் பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இந்த தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக Mi-17 ஹெலிகாப்டர்களை மாற்றுவதற்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்ரான் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் தொற்று நோய் காரணமாக, அந்த நிறுவனத்தால் ஒப்பந்தத்தை முடிக்க முடியவில்லை. இதனால், வான்வெளி மூலம் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த Mi-17 ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே வடிவமைப்பதற்கான சவாலை சண்டிகரில் அமைந்துள்ள ஐ.ஏ.எஃப் அடிப்படை பழுதுபார்க்கும் துறை ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து விமானிகள், பொறியாளர்கள் ஆகியோரின் உதவியுடன் Mi-17 ஹெலிகாப்டர்களின் வான்வெளி சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாம் சுற்று சோதனை ஜோத்பூரில் நடைபெறவுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த Mi-17 ஹெலிகாப்டர்கள் பயிர் பாதிக்கப்பட்ட பகுதிளில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் திறன் கொண்டவை. ஒரே நேரத்தில் சுமார் 750 ஹெக்டேர் பரப்பளவு வரை பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும்.
இந்த ஹெலிகாப்டர்களுக்குள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதற்கு 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பதற்கு ரூ. 1.5 கோடி வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண ஹெலிகாப்டர் 250 லிட்டர் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 50 ஹெக்டேர் பரப்பளவை மட்டுமே பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் குறித்து உணவு, வேளாண் அமைப்பு (எஃப்.ஏ.ஓ) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.