சீனாவுடனான பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் எல்லையின் மேற்குப் பகுதியில் இந்திய விமானப் படையின் (ஐ.ஏ.எஃப்) எல்.சி.ஏ தேஜாஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள எல்.சி.ஏ தேஜாஸ் 45 படைப்பிரிவு எதிரி நாடுகளின் விமானங்கள் வரம்பு மீறி இந்திய எல்லைக்குள் வருவதை கண்டறிந்து தடுப்பதற்கும், எதிரி விமானங்களை அருகே அண்ட விடாமல் விரட்டியடிக்கவும் பயன்படும். அத்துடன், பகல் மற்றும் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான பறக்கும் நடவடிக்கைகளை விமானம் மேற்கொள்ளும் என பாதுகாப்பு அலுவலகம் கூறுகிறது.
தற்சார்பு கொள்கை அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களின் கீழ், எச்ஏஎல் நிறுவனமானது உற்பத்தி செய்துவரும் உள்நாட்டு லைட் காம்பாட் விமானமான (எல்சிஏ) தேஜாஸ் எம்.கே . மார்க் 1 ஏ ஜெட் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.