கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தப் போரில் இந்தியா வென்றிருப்பினும், அதில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நேற்று பல்வேறு பகுதிகளிலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் அசாம் மாநிலம், தெஸ்பூர் கஜ்ராஜ் நினைவுச் சின்னத்தின் தலைமையகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அப்பகுதியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் கானகன்டா கியோட் பங்கேற்றார். அப்போது, கார்கில் போர் குறித்து மனம் திறந்த அவர், கார்கில் போரின் போது, எனக்கும் என்னுடன் இருந்த ஐந்து வீரருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் மருத்துவமனையில் என்னை சந்தித்தனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட காயம் குணமாகிவிடும். அதன்பின் மீண்டும் பாதுகாப்புப் படை உடை அணிந்து நாட்டை பாதுகாப்பேன் என அவர்களிடம் கூறினேன் என்றார்.
கார்கில் போரில் பங்கேற்ற இவருக்கு, தெஸ்பூர் கஜ்ராஜ் நினைவுச்சின்னத்தின் தலைமையகத்தில் உரிய கவுரவம் அளிக்கப்பட்டது.