IIMC கல்வி நிறுவனத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான ஒரியண்டேஷன் வகுப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கிவைத்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், நாட்டின் ஊடகத்துறை குறித்து முக்கியக் கருத்துகளை முன்வைத்தார்.
டி.ஆர்.பியை மையமாகக்கொண்டு காட்சி ஊடகங்கள் செயல்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று எனவும் வெறும் ஐம்பதாயிரம் வீடுகளில் உள்ள டிஆர்பி மீட்டர்கள் ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காது எனக் கூறினார்.
மேலும், ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் என்பது அத்தியாவசியமானது எனத் தெரிவித்த அவர், என்ன விலை கொடுத்தாவது ஊடக சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். அதேவேளை ஊடகத் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். அவர்கள் மக்களை தவறான பாதையில் நடத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், “நாட்டில் 12 கோடி மக்களுக்கு கழிவறை கிடைத்துள்ளது. 8 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது. 40 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இவையும் செய்திகள்தான். இது போன்ற ஆக்கபூர்வமான செய்திகளை மக்களிடம் ஊடகத் துறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, ஊடகத் துறை சார்ந்த மாணவர்கள் டி.ஆர்.பி. கலாசாரத்திற்கு பலியாகாமல் ஆரோக்கியமான செய்தி சேகரிப்புதிறனை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.