ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் ஹைதராபாத் காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 12ஆம் தேதி, இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிம் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் விசாரணை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில், இறுதி அறிக்கையைத் தாக்கல்செய்ய இந்த ஆணையத்திற்கு ஆறு மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. முன்னதாக, கால அவகாசம் கேட்டு விசாரணை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தது.
கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி, ஆறு மாத காலம் கால நீட்டிப்பு வழங்கியிருந்தது. ஓய்வுபெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா சோண்டூர் பல்தோட்டா, முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.