மத்தியப் பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 23 வயதான இளம் ஒருவர் அங்குள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'எனது 25 வயதான கணவர் நான் பலமுறை கூறியும் முகச்சவரம் செய்யவே இல்லை. குளிப்பதுமில்லை. மேலும் குளிக்காமலும், முகச்சவரம் செய்யாமலும், வாசனைத் திரவியங்களை மட்டும் உபயோகித்துக் கொண்டு தன்மீதுள்ள துர்நாற்றத்தை போக்குகிறார்.
எனவே இதுபோல் நடந்து கொள்ளும் கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்' என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த போபால் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.சந்த், முதற்கட்டமாக 6 மாதங்கள், பிரிந்து வாழுமாறும், இருவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நீதிமன்ற ஆலோசகர் ஷயில் அவஸ்தி கூறுகையில், இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், இருவருக்கும் குழந்தைகள் இல்லை எனவும், பெண்ணின் வீட்டார் எவ்வளவு வலியுறுத்தியும் இளம்பெண் விவாகரத்து கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோன்று 2016ஆம் ஆண்டில் மீரட்டைச் சேர்ந்த மனைவி ஒருவர் தனது கணவர் முகச்சவரம் செய்து கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என நீதிமன்றத்தை நாடிய சம்பவம் அரங்கேறியது நினைவிருக்கலாம்.