இது குறித்து புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி கோபாலன் கடை வீதி பகுதியில் வசித்துவந்த ஜோதி மூர்த்தி என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இதனையடுத்து அவரை ஜூலை 5ஆம் தேதியன்று கோபாலன் கடை இடுகாட்டில் புதைக்கும் போது, சுகாதாரத்துறை, நகராட்சி ஊழியர்கள் புதைகுழிக்குள் உருட்டித் தள்ளிவிட்டு அவமதிப்பு செய்தனர். இதன் வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளுவது குறித்து மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் கடைபிடிக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மீறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தோம். மேலும், கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதியன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் விரிவான புகார் மனு அனுப்பினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், புகார் மனுவை அனுப்பி வைத்து அதன் மீது ஆறு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க...நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க உத்தரவு!