இந்தியாவின் பெரு நிறுவனங்களில் ஒன்றாக பெங்களூருவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் திகழ்கிறது. இதன் ஒரு அமைப்பாக இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்கு பல நடைமுறைகள் உள்ளன. இதனை ஒழுங்குபடுத்த 2016ஆம் ஆண்டு அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்தது.
இச்சட்டத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து பெறப்படும் நிதி தொடர்பான விவரங்களை ஆண்டு அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் இதனை தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் பதிவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டு 1,755 அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்களின் பதிவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.