தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதிக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மோகாவில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர், லூதியானா, மோகா ஆகிய மாவட்டங்களின் 6 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து என்ஐஏ அலுவலர்கள் கூறுகையில், ''காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வாந்த் சிங் பன்னுன் கடந்த ஜூலை 1ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். இவரது உத்தரவின் பேரில் பண வெகுமதி அளிக்கப்பட்டதால், காலிஸ்தான் கொடி ஆகஸ்ட் 14ஆம் தேதி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது ஏராளமான பென்ட்ரைவ்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன'' என்றனர்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மோகாவின் துணை ஆணையர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் இரண்டு பேர் மஞ்சள் நிறத்திலான காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இதையடுத்து உடனடியாக மோகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
எஸ்எஃப்ஜே சார்பாக Referendum-2020 என்னும் வாக்கெடுப்பு நவம்பரில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: 15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு வலியுறுத்தல்