புதுச்சேரியில் விசிக மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அயோத்தி தீர்ப்பை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை பின்வருமாறு திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். அதில், "அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்தக் கட்டமைப்பை வைத்து குவிந்த மாடமாக இருந்தால் மசூதி, கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டிடம்" என்று பேசியிருந்தார்.
தற்போது அவர் பேசிய வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு திருமாவளவன் மீது வழக்கு பதிய வேண்டும் என புதுச்சேரியில் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி பாஜக சார்பில் அக்கட்சியின் நகர செயலர் கணபதி தலைமையில் புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் அறிவுச் செல்வத்தை சந்தித்து புகார்மனு அளித்தனர்.
அந்த புகார்மனுவில், "புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் மாநாட்டில் இந்துக் கோயில் அமைப்பை பற்றி திருமாவளவன் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
திருமாவளவனின் சர்ச்சையான கருத்துக்களைத் தொடர்ந்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முழுமையான உரையிலிருந்து பத்து நொடிகள் மட்டுமே வரும் பேச்சை முன்னிறுத்தி தன்னை மக்களுக்கு எதிராக திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!