இந்தியாவில் நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெய்ராம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடன் தொடர்பில் இருந்த ஒரு நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக எனக்கு சில கரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட் -19 சோதனையில் எனக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதமும் முதலமைச்சர் ஜெயராம் தாக்கூர்குக்கும் அவரது மனைவிக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரதேசத்தில் அக்டோபர் 11ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் 250 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.