அரசின் மருத்துவ சேவைகள் பெருவாரியான மக்களுக்கு சென்றடையாத நிலைதான் தற்போதும் நிலவிவருகிறது. பொது மருத்துவ சேவை மோசமான நிலையில் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் பல சவால்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்களின் மருத்துவத்திற்காக உலக நாடுகள் அதிகமாக செலவிட்டுவரும் நிலையில், இந்தியா சொற்ப தொகையை ஒதுக்கியுள்ளது. அரசின் மருத்துவத் திட்டங்கள் நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற முறையில் அமல்படுத்தப்பட்டுவருவதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. பொது மருத்துவ சேவையின் மோசமான நிலை நிதி ஆயோக் மூலம் தெளிவாகிறது.
புதிய இந்தியாவை கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பல துறைகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவுகளை ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவைவிட இலங்கை, இந்தோனேசியா, எகிப்து, பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் அதிகம் செலவிடுவது தெரியவருகிறது.
சர்வதேச அளவில், சராசரியாக ஒருவர் தனது வருமானத்திலிருந்து 18 விழுக்காட்டை மருத்துவத்திற்காக செலவிடுகிறார். ஆனால், தேசிய அளவில் ஒருவர் 63 விழுக்காடு மருத்துவ செலவை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மருத்துவத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்த 5 விழுக்காட்டை தவிர்த்து பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் மூலம் மக்கள் தொகையில் 40 விழுக்காடு மக்கள் பயனடைகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. மருத்துவத்திற்கு செலவிடுவதால் ஆறு கோடி இந்தியர்கள் கடனாளியாகின்றனர் என தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் தகவல் வெளியிட்டுள்ளது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் பெறப்படும் பலன்கள் பலருக்கு சென்றடைவதில்லை. சரியான நேரத்தில் மருத்துவ சேவைகள் கிடைக்காததால் 24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியா, சீனா, துருக்கி, பெரு, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் மருத்துவத் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி மனிதவள மேம்பாட்டிற்கு மருத்துவ சேவை முக்கியம் என்பதை நிரூபித்துள்ளது. கனடா, கத்தார், நார்வே, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் மருத்துவ சேவையில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் மருத்துவ சேவை மோசமடைந்ததற்குப் பல வளங்கள் இல்லாதது காரணம். இந்தியாவை விட 7 மடங்கு அதிகமாக சீனா மருத்துவத்திற்காக செலவிடுகிறது. கியூபா, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 7-8 விழுக்காடு வரை மருத்துவத்திற்காக செலவிடுகிறது. ஆனால், இந்தியா 1.1 விழுக்காடு மட்டுமே செலவிடுகிறது. அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்தியாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து பில் கேட்ஸ், "இந்தியாவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது" என்றார். இந்த சொற்கள் உண்மையாக வேண்டுமானால், அரசு மருத்துவமனைகளின் நிலையை மேம்படுத்த வேண்டும், நிதி ஒதுக்குதல், காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். மோசமான நிலையில் இருக்கும் மருத்துவ சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமானால், பொது மருத்துவ சேவை அனைவருக்கும் சென்றடையும்.
இதையும் படிங்க: ஜூலிமா - குழந்தை திருமணங்களுக்கு எதிராக ஒலிக்கும் பெயர்!