டெல்லி: இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்தப் புதிய வகை வைரசின் தன்மை குறித்து ஆலோசிக்க மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.
உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயர்மட்ட அலுவலர் கூறியதாவது, "இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா பரவும் விதத்தில் இதுவரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. கரோனா வைரசின் உருமாறுதலைக் கூர்ந்து கவனித்துவருகிறோம். ஆனால், பிற நாடுகளில் கரோனா வைரசின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் கண்காணித்துவருகிறோம்.
அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருகிறது. இதன் தன்மை குறித்து ஆலோசனை நடத்த, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழுவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்" என்றார்.
புதிய வகை கரோனா
இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் புதியவகை வைரசால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
மீண்டும் முழு ஊரடங்கு
இந்நிலையில் வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் பரவிவரும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - 2021 ஏப்ரல் மாதம் தேர்தல்