கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் நீக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு, நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கரோனாவின் தாக்கம் தீவிரமாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 3,900 பாதிப்புகளும், 195 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், 1,020 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் நீக்கப்பட்டபின் நாட்டில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது பெரும் கவலையளிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அகர்வால் கூறுகையில், நாட்டில் கரோனா வைரசால் இதுவரை 46,433 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,568 பேர் உயிரிழந்துள்ளனர். காலம் தாழ்த்தி கரோனா வைரஸ் குறித்த விவரங்களை தெரிவித்துவந்த மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தற்போது சரியான நேரத்தில் தெரிவிக்கின்றன. அதனால்தான் நாட்டில் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியுமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 1020 பேர் குணமடைந்ததன் மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,727ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொடர்ந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காஷ்மீர் பத்திரிகையாளர்களால் பெருமை - ராகுல் காந்தி