மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்படி 2019 நவம்பர் மாதத்தில் திவாஹா ஃபாசல், ஆலன் சுஹைப் ஆகிய இருவரை கேரள காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவ்விருவரும் தங்களைப் பிணையில் விடுவிக்கக்கோரி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் 9ஆம் தேதி பிணை வழங்கியது.
இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல்செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவானது, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ. ஹரிபிரசாத், கே. ஹரிபால் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (ஜன. 04) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “ஊடகத் துறை மாணவரான திவாஹா ஃபாசலுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்துசெய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் திவாஹா விரைவில் சரணடைய வேண்டும். எவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு நவம்பரில் திவாஹாவுடன் கைதுசெய்யப்பட்ட ஆலன் சுஹைபிற்கு வழங்கப்பட்ட பிணை ரத்துசெய்யப்படவில்லை.
அவரது வயது, அரசியல் ஈடுபாடு ஆகிய காரணங்களுக்காக ஆலன் சுஹைப் பிணை விடுவிப்பிற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இவ்வழக்கின் விசாரணையை ஓராண்டுக்குள் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இதையும் படிங்க : மத்திய அரசு - விவசாயிகள் பேச்சுவார்த்தை தோல்வி!