வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற அமைப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
அந்த இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரிக்காமல் குப்பைகளை அகற்றக்கூடாது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல் துறையினரால் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ காட்சிகள் பரப்பப்பட்டு வருகின்றன” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில மற்றும் காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். இந்த வழக்கு வருகிற 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.