இந்தியாவில் ஒவ்வொரு மனங்களிலும் சாதியம் புரையோடி போயிருக்கிறது. சமூகத்தின் பெரும் அழுக்காக இருக்கும் சாதியை களைய, சாதியத்திற்கு எதிரானவர்கள் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். சாதியை தூக்கி எறிந்து பலர் காதல் திருமணம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களையும் வாழ விடாமல் ஆணவக்கொலை செய்து சாதியத்தை வளர்த்து வருகின்றனர். இந்த சமூக சூழலை மீறி காதல் திருமணங்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன. ஏனெனில் சாதியை ஒழிப்பதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது.
சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சாதி மறுப்பு திருமணங்களுக்காகச் சிறப்புச் சட்டமும் இந்திய அரசியலமைப்பில் உள்ளது. இந்நிலையில், மாற்று சாதி ஆண்களை நாங்கள் கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டோம் என்று இளம்பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம், குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை அர்புடா லேடீஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு நடத்தியது. அதில் 'சவுதாரி' சமூகப் பெண்கள், 'சாதி மறுப்பு திருமணம் செய்வதில்லை" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் உறுதிமொழி எடுக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது வைரலாகிறது.