நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத்துவரும் நிலையில், கரோனா பாதிப்பில் பின்தங்கிய மாநிலமாக இருந்த குஜராத் சில நாள்களில் நாட்டில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.
மாநிலத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த எய்ம்ஸ் மருத்துவமனையின் குழு கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியது. அந்நாளில் அகமதாபாத், வதோதரா, சூரத், காந்திநகர், கட்ச் ஆகிய பகுதிகளில் மட்டுமே கரோனா பரவியிருந்ததாகவும், கரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 14 ஆகவும் இருந்தது எனத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது, மாநிலத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைக் கடந்து, நாட்டில் அதிகளவு வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக உள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை இந்த வைரஸால் 537 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குஜராத் அரசும், சுகாதாரத்துறையினரும் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிவருகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்த குஜராத் சுகாதாரத்துறை செயலர் ஜெயந்தி ரவி, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், மீண்டுவருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது என்றார்.
தேசிய அளவில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் விழுக்காடு 31.7 ஆக உள்ளதாகவும். ஆனால் குஜராத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36.5 விழுக்காடாக உள்ளது எனவும் இது ஒரு நல்ல முன்னேற்றம் எனவும் கூறினார். மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள், மூலிகைத் தேநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுவருவதாகவும் இது அவர்களை கரோனா தொற்றிலிருந்து மீட்பதற்கு உதவியாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்றவர்களினாலே கரோனா தொற்று பரவியதாக அம்மாநிலத்தின் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் குற்றம்சாட்டிவந்தவண்ணம் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, ஊரடங்கினால் செயல்படாமலிருந்த நவரத்தின ஏற்றுமதிகளும், தங்கம், வைரம் உள்ளிட்ட விற்பனைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக சூரத் நகை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தினேஷ் நவாடியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் 5000-ஐ கடந்த கரோனா!