அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டை படேல் சமூகத்திற்கு வழங்க குஜராத்தில் ஹர்திக் படேல் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்போராட்டம் அனுமதியின்றி நடைபெற்றதாக காவல் துறையினர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும், போராட்டத்திற்கு பின்பு வன்முறை நிகழ்ந்ததாகவும் அதற்கு காரணம் ஹர்திக் படேல் எனவும் குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக, ஹர்திக் கைது செய்யப்படலாம் என கருத்து பரவிவந்த நிலையில், முன் பிணை கோரி அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஹர்திக் படேலுக்கு முன் பிணை வழங்க மறுத்து நீதிபதி வி. எம். பஞ்சோலி உத்தரவிட்டுள்ளார். படேல் சமூகத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றபோது, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். அப்போது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் மீண்டும் கைது