குஜராத் மாநிலம், டாபி மாவட்டத்தில் போக்ரான் கிராம் அருகே தேசிய நெடுஞ்சாலை-53 வழியாக இன்று மதியம் ராஜஸ்தானில் இருந்து உக்காய் நகரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது, எதிர்திசையில் வந்த டேங்கர் லாரி இந்த பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனிடையே, பேருந்துக்குப் பின்னால் வந்துக்கொண்டிருந்த ஜீப்பும் பேருந்தின் பின்புறம் மோதியது. இந்தக் கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.எல்.மல்வானி கூறுகையில், "குஜராத் மாநில பேருந்து ஒன்று டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, பேருந்துக்கு பின்னால் வந்த ஜீப் பேருந்தின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், 22 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் தான் பாதை மாறி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ட்விட்டருக்கு டாட்டா காட்ட மோடி முடிவு?