கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நாடு முழுக்க கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்பை அளிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்தத் தொகுப்பு குறித்த விவரங்களை கடந்த 13ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த அறிவிப்புகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்தப் பொருளாதார சிறப்பு ஊக்கத் தொகுப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம்,“கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சிறப்பு நிதி ஊக்கத் தொகுப்புகளை அறிவித்துள்ளது.
அது நாட்டு மக்களுக்கு "நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இல்லை" என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத திருத்தப்பட்ட மற்றும் விரிவான தொகுப்பை அறிவிக்க வேண்டுமென நாங்கள் கோரினோம். ஆனால், மத்திய அரசு அறிவித்ததோ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவீதம் மட்டுமேயாகும்.
நாங்கள் இந்த அறிவிப்பில் முழுமையான ஏமாற்றமடைந்துள்ளோம். கோவிட்-19 ஊரடங்கால் இதுவரை சந்திக்காத பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்து நிற்கும் நமது விவசாயிகள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், சிறுகடை உரிமையாளர்கள், மாத ஊதியப் பணியாளர்கள், சிறு-குறுந்தொழில் முனைவோர் உள்ளிட்ட பிரிவினர்களின் நலனையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு நிதித் தொகுப்பை மறுபரிசீலனை செய்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு சமமான உண்மையான கூடுதல் செலவினங்களில் ரூபாய் 10 லட்சம் கோடிக்கும் குறையாத நிதி ஊக்கத் தொகுப்பை அறிவிக்க வேண்டும். 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா 7,500 ரூபாயை மத்திய அரசு வழங்கிட வேண்டும். மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கினால்கூட 13 கோடி குடும்பங்களுக்கு வெறும் 65 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவாகும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் மத்திய அரசின் சந்தர்ப்பவாதத்தைக் கண்டிக்கிறேன். மத்திய அரசு, வேண்டுமென்றே நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைகிறது. சிறப்பு நிதி ஊக்கத் தொகுப்பைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!