உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. கரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. முழுமையான முடக்கம் காரணமாக, உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள்வரை முடங்கியிருந்தன.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாதுகாப்புத் துறைக்கு சென்றுசேர வேண்டிய தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் வன்பொருள்களும் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளன.
இந்த விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அலுவலர்கள் நீண்ட விவாதத்திற்கு பிறகு ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது, இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் வன்பொருள்களை விநியோகிக்கும் இந்திய விற்பனையாளர்களுக்கு, தமது உற்பத்தி பொருள்களை கையளிக்க நான்கு மாத கால அவகாசத்தை வழங்கும் என அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்திய விற்பனையாளர்களுடன் தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கான விநியோக காலத்தை பாதுகாப்பு அமைச்சகம் நான்கு மாதங்கள் நீட்டித்துள்ளது.
இந்திய விற்பனையாளர்களின் மூலதன வாக்குறுதிகளை பிணையாக வைத்துக்கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்படும். இந்த கால அவகாசம் மார்ச் 25 முதல் ஜூலை 24ஆம் வரையிலான காலத்திற்கு உபகரணங்கள் மற்றும் வன்பொருள் விநியோக கால நீட்டிப்பு பொருந்தும்.
வெளிநாட்டு விற்பனையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகலாம். இது அந்தந்த நாடுகளில் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் வழக்குகளை பரிசீலிக்கலாம்" என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு உத்தரவையும் தற்போது பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின்படி, இந்த புதிய ஏற்பாட்டை செயல்படுத்த தனி ஒப்பந்தம் அல்லது குறிப்பிட்ட திருத்தங்கள் தேவையில்லை என அறிய முடிகிறது.