சிபிஐ அமைப்பு இயக்குநராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து இருவருக்கும் மோதல் முற்றியது. ஆகையால் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து அலோக் வர்மா தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது, அவரை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி அலோக் வர்மா வேறு துறைக்கு மாற்றப்பட்டார், இதனால் ஓய்வுபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது சிபிஐ இயக்குநராக நாகேஷ்வர ராவ் அப்பொறுப்பில் உள்ளார். ஆனால் முழுநேர இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து பிரதமர் தலைமையிலான குழு இன்று கூடி மீண்டும் ஆலோசிக்கவுள்ளது.
இந்நிலையில் சிபிஐ புதிய அதிகாரிகளாக 4 பேரை அரசு நியமித்துள்ளது. அகிலேஷ் குமார் சிங் மற்றும் துரை குமார் ஆகியோர் சிபிஐ-ன் டிஐஜி-யாகவும், புட்டா விமலாதித்யா மற்றும் அகிலேஷ் குமார் சௌராசியா ஆகியோரை சிபிஐ-ன் காவல் கண்காணிப்பாளராகவும் அரசு நியமித்துள்ளது.