டெல்லி: 2019-20 ஆண்டு ஏழு பொருள்களை குறைந்தப்பட்ச ஆதார விலையுடன் கொள்முதல் செய்ததன் மூலம் 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாக பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்தப்பட்ச ஆதார விலை குறித்த கேள்வியின்போது, குறைந்தப்பட்ச ஆதார விலையில் பொருள்களை வாங்கியதன் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் எனப் பதிலளித்த அரசு, இந்திய உணவு கூட்டு நிறுவனம், அரசு நிறுவனங்கள் மூலம் நெல், கோதுமைக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை வழங்கியதாக விளக்கம் அளித்தது.
மின்னணு தேசிய விவசாய சந்தை (e-NAM) குறித்த கேள்வியின்போது, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 1,000 மண்டிகள் இ-நாம் போர்டலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், 1.69 கோடி விவசாயிகள் அதில் பதிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு பதிலளித்துள்ளது. மேலும் ஆயிரம் மண்டிகள் அடுத்த நிதியாண்டில் இ-நாம் போர்டலுடன் இணைக்கப்படும் என்றும் அரசு கூறியது.
1.55 லட்சம் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ள இ-நாம் போர்டலில், 4.13 கோடி டன் அளவிலான பொருள்கள், 3.68 கோடி தேங்காய்கள், ரூ. 1.22 லட்சம் கோடி மதிப்பிலான மூங்கில்கள் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இ- நாம் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்ட பாதையில் செல்வதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இ-நாம் வெறும் திட்டமல்ல எனச் சுட்டிக்காட்டிய அரசு, இது கடைக்கோடியில் இருக்கும் விவசாயி தனது உற்பத்தி பொருளை விற்பனை செய்யும் முறையை மாற்றும் பயணம் என்றும் விளக்கமளித்தது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து துணை நிற்கிறேன் - மியா கலிபா